|
Pallikoodam Tamil Movie Review |
| Print |
|
E-mail
|
|
Sunday, 26 August 2007 |
படம் ஆரம்பித்ததும், திரைமுழுக்க இருட்டாய் மாற, ‘‘ஒரு நிமிடம் நீங்கள்
கண்களை மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் படித்த பள்ளிக்கூடத்தை நினைத்துப்
பாருங்கள். உங்கள் வகுப்பறை, அதில் உங்கள் அருகில் அமர்ந்த பள்ளித்
தோழர்கள், அவர்களையெல்லாம் நினைத்துப் பாருங்கள்’’ என்று, ஒரு கிராமத்துக்
குரல் நிதானமாக ஒலிக்கும்போதே, ஆஹா, இது வேறு தரத்தில் அமைந்த படம் என்ற
உணர்வு வந்து மனதில் உட்கார்ந்துவிடுகிறது.
ஒரு சிலேட்டுப் பலகையில் எழுதிவிடக்கூடிய கதைதான். பொன்விழா காணும் நேரத்தில், இழுத்து மூடக்கூடிய நிலையில் பாழடைந்து கிடக்கிறது அந்தப் பள்ளிக்கூடம். அதை மீண்டும் திறக்க, அந்தப் பள்ளியில் படித்து முன்னேறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, சினிமா இயக்குநர் போன்றவர்களை உதவிக்கு அழைப்பதுதான் ப.கூ. கூடவே கொஞ்சம் காதல்!
இயக்குநர் என்பதோடு தான் நல்ல நடிகர் என்பதையும் கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறார், கிராமத்து தொழிலாளியாய் வரும் தங்கர்பச்சான். (அய்யோடி!) கலெக்டருக்கும், டைரக்டருக்கும் சால்வை போர்த்தும்போது தானும் அதற்குள் தலையை நுழைப்பது, ஆசிரியர் காலில் மற்றவர்கள் விழும்போது ‘நானும் விழுந்துக்கறேன்யா’ என்று அவசரமாய் விழுவது, நண்பனின் வீட்டில் பழைய துணிகளை எடுத்துக்கொள்ள மறந்தது பற்றி லேசாக அலுத்துக்கொள்வது என்று முந்திரிக்காட்டு சராசரி மனிதனாகவே வாழ்ந்திருப்பதற்கு தங்க(ர்)ப்பதக்கம் தரலாம்.
சேகுவாரா புகழ் சீமான், ஒரு கோயிலுக்குள் கவர்ச்சி நடனத்தைப் படம் பிடிக்கும்போது என்னவோ போல்தான் இருக்கிறது. போகப் போக பளிச்.
சொன்னதைச் செய்திருக்கிறார் நரேன்.
அடக்கமாக ஸ்நேகா.
ஸ்கூல் இன்ஸ்பெக்ஷனுக்கு அதிகாரி வர, மட்டம் போட்ட மாணவர்களை ஆசிரியர்களே தெருத்தெருவாய்த் தேடிக் கண்டுபிடித்து இழுத்து வரும் காட்சியும், பாடலும் கொள்ளை அழகு.
பள்ளிக்கூட விழாவில், ஒரு கிழவர், தன் ப்ளாஷ்பேக் காதலை எடுத்துவிடுவதும், அந்தக் காதல் கிழவி, அதைப்பற்றி இப்போது பேசுவதும் கிழவரின் மனைவி முறைப்பதும் மரபு... இல்லை புதுக்கவிதை!.
காவியம் மாதிரியான படத்தில் சில காயங்களும் இருக்கின்றன.
டியூஷன் மாஸ்டர் ஷ்ரியாவின் கால்களைப் பார்க்க, பென்சிலைக் கீழே போட்டுத் தேடுவதுபோல் மாணவன் நடிக்க, வெறும் கிளாமர் போல் காட்சிகளை அமைத்து விட்டு, ஷ்ரியாவை ஒரு அம்மா ஸ்தானத்தில் வைத்திருப்பதாகத் தொடரும் காட்சிகள் நம்பும்படியா இருக்கிறது?
ஐ.ஏ.எஸ். அதிகாரி, தன் வேலையையெல்லாம் விட்டுவிட்டு நண்பனைத் தேடுவதிலேயே பொழுதைக் கழிப்பதையும், ஸ்நேகாவுடனான காதல் முறிவுக்கான காரணத்தை அறியாமல் இருப்பதையும் ஏற்க முடியவில்லை.
சின்னச் சின்னதாய்க் குறைகள் ஆங்காங்கேயிருந்தாலும், படம் பார்த்து வெளியில் வந்ததும், நாம் படித்த பள்ளிக்கூடத்திற்குப் போய் உடனே பார்க்க வேண்டும். கிராமத்தில் பள்ளித் தோழர்களையெல்லாம் சந்திக்கவேண்டும் என்று தூங்கிக் கிடந்த இனிய உணர்வுகளைத் தட்டியெழுப்பிய எண்ணெய் வழியும் ‘அய்யோடியை’ அப்படியே ஆசையாகக் கட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது..
Click Here To Bookmark Vellithirai.Com               |